தமிழக எப்ஸ்டின் இந்த இசையமைப்பாளர் தான்: செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்கிறார் ஸ்வாகதா
பிரபல பின்னணிப் பாடகி ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கோலிவுட் இசையுலகையே அதிரவைக்கும் ஒரு பகீர் புகாரை முன்வைத்துள்ளார். ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளரை "மெட்ராஸின் எப்ஸ்டீன்" (Epstein of Madras) என்று சாடியுள்ள அவர், அந்த நபர் ஒரு தொடர் பாலியல் குற்றவாளி என்று குற்றம் சாட்டியுள்ளார். சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சவுண்ட் புரூப் (Soundproof) ஸ்டுடியோவிற்குள் வைத்து தனக்கு அந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்வாகதா கண்ணீருடன் விவரித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அதிர்ச்சியூட்டும் மற்றொரு தகவல் என்னவென்றால், அந்த ஸ்டுடியோவில் ரகசியமாகச் சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் பதிவான காட்சிகளை வைத்தே அந்த இசையமைப்பாளர் தன்னை மிரட்டியதாகவும், தன்னிடம் வாங்கிய பெரும் தொகையைத் திரும்பத் தராமல் ஏமாற்றியதாகவும் ஸ்வாகதா தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, அங்கு வரும் சிறு குழந்தைகள் முதல் பெண்கள் வரை பலரையும் அந்த நபர் ரகசியமாகப் படம் பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் என்ற திடுக்கிடும் தகவலையும் அவர் உடைத்துள்ளார்.
தற்போது ரிஷிகேஷில் வசித்து வரும் ஸ்வாகதா, இந்தத் துயர சம்பவத்தால் ஏற்பட்ட மன உளைச்சலாலேயே சென்னையை விட்டும், திரைத்துறையை விட்டும் வெளியேறியதாகக் கூறியுள்ளார். அந்த இசையமைப்பாளர் மிகவும் பிரபலமான டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் அல்ல என்றும், ஆனால் ஒரு காலத்தில் தன்னுடன் நெருக்கமாகப் பணியாற்றியவர் என்றும் அவர் ஒரு குறிப்பைக் கொடுத்துள்ளார். இருப்பினும், சட்டப்பூர்வமான சிக்கல்களைத் தவிர்க்க அவரது பெயரை இப்போது நேரடியாக வெளியிடவில்லை.
இந்த விவகாரத்தைச் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்வாகதா, இனி எந்த ஒரு பெண்ணும் அந்த நபரால் பாதிக்கப்படக் கூடாது என்பதே தனது நோக்கம் என்று கூறியுள்ளார். "மெட்ராஸின் எப்ஸ்டீன்" என அவர் குறிப்பிட்ட அந்த நபர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள நெட்டிசன்கள் இப்போதே துப்பறியத் தொடங்கிவிட்டனர். சமூக வலைதளங்களில் இது குறித்த விவாதங்கள் அனல் பறந்து வரும் வேளையில், அந்த இசையமைப்பாளரின் முகமூடி விரைவில் கிழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: